லூஸர்ஸ் - பகுதி2



கிரவுண்டை பத்து முறை ஓடிக்கடக்க வேண்டுமென்பது அவ்வளவு எளிதல்ல. நாலாவது ரவுண்டுக்குள் நாக்குத்தள்ள ஆரம்பிக்கும். ஆறாவது ரவுண்டில் தாத்தா,பாட்டியெல்லாம் கண்ணில் தென்படுவார்கள்.பத்தையும் கடப்பது பரமன் புண்ணியம். நான் ஏழாவது சுற்றில் கரை ஒதுங்கினேன். நிற்க முடியாமல் வேப்ப மரத்து அடியில் போய் உட்கார்ந்தேன். ஏற்கனவே அங்கு ஐயப்பன், கரடிசெந்தில், அனந்த்து மற்றும் சில பராக்கிரமசாலிகள் மட்டையாகிக்கிடந்தார்கள். எனக்கு தலை கிறுகிறுவென சுற்றியது. இரண்டு கால்களை மடிக்கி உட்கார்ந்து கொண்டு மூச்சி வாங்கினேன். வலது பக்கம் திரும்பிப் பார்த்தேன். கரடி சட்டையை கழட்டிவிட்டு படுத்திருந்தான். உடம்பு முழுக்க நனைந்து இருந்தது. வயிறு மேலும் கீழும் போய் வந்துகொண்டிருந்தது. கார்த்தியண்ணன்,சுருளி, ரஞ்சித் என மூன்று பேர் மட்டும்தான் பத்து சுற்றையும் முடித்திருந்தார்கள். காளிமுத்து சார் வந்தார். எங்களை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து "என்னய்யா.. டீம்ல மூனு ஆம்பளைக தானா.." என்றார். ஐயப்பனுக்கு மூக்கு விடைக்க ஆரம்பித்தது. எழுந்தான். எச்சைத்துப்பிவிட்டு கோபமாய் ஓட ஆரம்பித்தான். எனக்கும் வீரம் வந்தது எழுந்து பின்னால் ஓட ஆரம்பித்தேன். பின்னாலேயே அனந்த்துவும் கரடியும் ஓடி வந்தார்கள். கரடி என் பக்கத்தில் வந்து "இப்படில்லாமாடா ஆண்மைய நிரூபிக்கிறது.. பொசுக்கு பொசுக்கு ரோசப்பட்டுறீங்களேடா.." என்றான். அனந்த்து சோகமாய் "பேசாம பேட்மிட்டன்ல சேந்திருப்பேன்...பொத்துனாப்ல கிரவுண்டுக்கு வந்திட்டு போயிருக்கலாம்..எந்நேரம்" என்றான்.

ஓடி முடிந்து பிட்ச்சுக்கு போய் நின்றோம். குளுக்கோஸ் கொடுத்தார்கள். உள்ளங்கையில் வாங்கி நளினமாய் நக்கினோம். காளிமுத்து சார் தொப்பி,பேட் சகிதம் நின்று கொண்டிருந்தார்."நம்ம டீம் பேட்ஸ்மேன்லாம் லெப்ட் சைடு வாங்க.." என்றார். எட்டு பேர் ஒதுங்கினோம். அனந்த்து வருவதா வேண்டாமா என்று குழம்பி பின் அங்கேயே நின்று கொண்டான். அவர் சிரித்து " உனக்கே நம்பிக்கையில்லையா.." என்றார். எல்லாருடைய மூஞ்சயும் ஒருமுறை பார்த்தார். "இன்னைக்கு யாராவுது க்ராஸ் ஷாட்  ஆடுனா ஒரு வாரத்துக்கு பேட்டிங் கிடையாது..Front foot ஆடத்தெரியாதவுங்க பேட்டிங் ஆர்டரில கீழ போயிருவீங்க..டெய்லி பத்து ரவுண்டு அடிக்காம பிச்சுக்குள்ளேயே எவனும் நுழைய முடியாது.." பேசிவிட்டு எங்களையே பார்த்தார். எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றிருந்தோம். கிரிக்கெட் விளையாடுவதை வாத்தியார்கள் வெளியேயிருந்து பார்த்து அதற்கு இன்டர்னல் மார்க் போடுவது போல் இருந்தது. "பிடிச்ச ஒரு விஷயத்தையும் கெடுத்திருவாய்ங்களோ" என பயந்து கொண்டேன். 



பவுலர்கள் பாடு படுதிண்டாட்டம். பேட்டிங் க்ரீசுக்கு அருகிலிருந்து ஒரு மரப்பலகை வைக்கப்பட்டது. அது நாலடி நீளமும் ஓரடி அகலமும் உடையது. டென்னிஸ் பாலை கொடுத்து தொடர்ச்சியாய் ஆறு பந்துகளும் அந்த பலகையில் விழுமாறு வீச வேண்டும். "குட் லென்த்" பந்துகள் வீச பெரிய அணிகள் இப்படித்தான் பயிற்சி எடுப்பார்களாம். அனந்த்து, ஷான் போல்லக்கின் விசிறி,ஆகையினால் ஒரு மாதிரி டிக்கியை நெளித்து நெளித்து ஓடி வந்து பந்து போடுவான். அவனால் எவ்வளவு முயன்றும் பலகையின் மேல் வீச முடியவில்லை. அதனால் அன்று மட்டும் அவன் பதினைந்து ஓவர்கள் போட வேண்டியிருந்தது. 

கொஞ்ச நாளில் காளிமுத்து சாரின் பயிற்சியின் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப்போனது. நாங்களாகவே ஞாயிற்றுகிழமையில் பயிற்சிக்கு போக ஆரம்பித்தோம். அப்போது வெளியாகியிருந்த க்ரிஷ் ஸ்ரீகாந்தின் "பேட் லைக் எ மாஸ்டர்" சிடி போட்டுக்காண்பித்தார். அதில் பேட்டிங் பற்றிய நுணுக்கங்கள் இருந்தது. புல் ஷாட்டுகள், ஸ்வீப் ஷாட்டுகள், ட்ரைவ்கள் போன்றவை விளக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றியே அந்த நாட்களில் பேசிக்கொண்டிருந்தோம்.ஐயப்பன், பெருமாள், ரஞ்சித், சுருளி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தயாரானார்கள். நான் எனக்கு பிடித்த மூனாவது டவுனில் களமிறங்குவதாக முடிவானது. முப்பது நாளில் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என நாங்கள் யாருமே நம்பவில்லை. காளிமுத்து சார் ஒரு நாள் காலை கிரவுண்டில் எல்லாரையும் வரச்சொன்னார்.



"நல்ல இம்ப்ரூவ்மண்ட் இருக்கு. ஆனா நமக்கு ரிசல்ட் வேணும். இன்னும் முப்பது நாளுல யுனிவர்சிட்டி மேட்ச் ஆரம்பிக்க போகுது. எல்லா வருஷமும் நம்ம காலேஜ் டீம் அதுல கோமாளியா இருக்கும். இந்த தடவ நாம மிரட்டலா விளையாடி கப்பைத்தூக்கிறோம்...இனி எவனாவது சாமியார் காலேஜ்னு கேலி பண்ணட்டும்.. சரி அதுக்கு முன்னாடி ரெண்டு பிராக்டிஸ் மேட்ச் ஆடுறோம்...வர்ற ஞாயிற்றுக்கிழமை திரும்பவும் மதுரை மெடிக்கல் காலேஜ் போறோம்..."

"சார்..சனிக்கிழமை போனாலாவுது சைட் அடிக்கலாம்..."

"யாருடா அது... செந்திலா.."

"சார் எல்லாத்துக்கும் நாந்தானா..சுருளி சார்.."

சிரித்தார். "வழக்கம் போல இப்போ நம்ம கேப்டன் கார்த்தி டீமை அறிவிப்பார்". கார்த்தியண்ணன் எழுந்தார். பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப்படித்தார்."ஐயப்பன்,பெருமாள்,ரஞ்சித்,சுருளி,சிவராஜ்,அனந்தராமன்,கார்த்தி,பிரதீப்,செந்தில்,வீரக்குமார்,ராஜேஷ் தென் சின்னா டுவெல்த் மேன்..." கை தட்டினோம்.மேற்சொன்ன நாளில் மதுரை மெடிக்கல் காலேஜ் போனோம். அவர்கள் வழக்கம்போல் தயாராய் இருந்தார்கள். டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தோம். ஓப்பனர்கள் பட்டையை கிளப்பினார்கள். ஐயப்பன் அறுபது ரன்கள் எடுத்தான். இருபது ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தோம். நான் பத்து ரன்கள் எடுத்தேன். கரடி என் பக்கத்தில் வந்து "ஒரு வேளை ஜெயிச்சாலும்.. ஜெயிச்சிருவோமோ.." என்றான். முறைத்தேன்.


மெடிக்கல் காலேஜ் ஓப்பனர்கள் வந்தார்கள். கரடியின் முதல் ஓவரில் பத்து ரன் போனது. பெருமாளின் ரெண்டாவது ஓவரில் ஏழு ரன்கள் போனது. கரடி திரும்பவும் ஓவர் போட வந்தான். கார்த்தியண்ணனும் நானும் அவன் பக்கத்தில் போனோம். கார்த்தியண்ணன் நெருங்கிப்போய் "செந்தில் ஓ.பி போடாத..ஏத்தி ஏத்தி வை.." என்றார். நான் "பீல்டிங் மாத்தனுமா.." என்றேன். முறைத்தான். அதற்கு "மூடிக்கிட்டு போ.." வென்று அர்த்தம். வந்து நின்றேன். முதல் பந்து போட்டான். மின்னல் வேகம். ஆனால் ஓவர் பிச்சிடு பால். சுதாகர் அதை பொலேரென அடித்தான். "ட்டாக்" கென சத்தம் வந்தது. சிக்ஸ். அதுவும் மிகவும் உயரமாய் போய் விழுந்தது. "போச்சு இன்னைக்கு கரடி செத்தான்..." என்றான் அனந்த்து. கரடியின் அடுத்த பந்து தான் அவன் வாழ்கையிலேயே போட்ட சிறந்த பந்தாக இருக்கும். அவுட்ஸ்விங்காகி ஆப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. கரடி கத்திக்கொண்டு ஓடிவந்தான். சுதாகர் முழித்துக்கொண்டு போனான். சுதாகரை விட நாங்கள் தான் அதிர்ச்சியாய் இருந்தோம்.

மளமளவென ஆறு விக்கெட் எடுத்தோம். வழக்கம் போல அந்த உயரமானவன் வந்து வேலையை காண்பித்தான்.காட்டடி அடிக்க ஆரம்பித்தான். பவுண்டரிகள் பறந்தது. இன்னும் முப்பது பந்துகளில் ஐம்பது எடுக்கவேண்டும். இப்போது உயரமானவன் வீராவின் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தான். வீரா ஆப் ஸ்பின்னர்.நான் ஸ்டம்ப்புக்கு பின்னாலிருந்து கத்தினேன். "குட் பால்...குட் பால்..விடாத..தூக்கலாம்...கமான்...ஈஸி ஈஸி.." அடுத்த பந்து கொஞ்சம் வேகமாய் வந்தது.வளந்தவன் "மட்டை" வைக்க முயன்றான். பந்து பேட்டின் நுனியை மெல்லியதாய் ஒரு முத்தம் கொடுத்து என் கையில் தஞ்சம் புகுந்தது. நானும் வீராவும் ஓடி வந்து கட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அவர்கள் ஆல்அவுட் ஆனார்கள். எல்லோருக்கும் கை கொடுத்தோம். வெற்றியை முதல் முறையாய் உணர்கிறோம். கரடி அனந்த்துவிடம் வந்து "மச்சி திடீர்னு எனக்கு கங்குலி கால் பண்ணி சவுத்ஆப்ரிக்கா வானு கூப்பிட்டா என்னா பண்றதுடா..செமெஸ்டர் வேற இருக்கே.." என்றான். அனந்த்து சிரித்துக்கொண்டே "கவலப்படாதடா..அங்கெல்லாம் கக்கூஸ் கழுவிறதுக்கு ஆட்கள் கெடப்பாங்க.. கூப்பிட மாட்டார்" என்றான். சிரித்தேன்.



காளிமுத்து சார் வந்து எல்லாருக்கும் கை கொடுத்தார். அன்று இரவு மதுரை பாண்டியன் ஹோட்டலில் சாப்பிட்டோம். ஒரே பெரிய டேபிளில் பதினாலு பேரும் உட்கார்ந்திருந்தோம். அமைதியாய் இருந்த இடத்தில் வழக்கம்போல அனந்த்து ஆரம்பித்தான். "ஒருக்க..வெஸ்ட்இண்டீஸ் வெர்சஸ் இங்கிலாந்து மேட்ச்..அப்போ விவியன் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் பிடிக்கிறாரு.. இங்கிலாந்து பவுலர் போட்ட பால் பிச்சாகி ரிச்சர்ட்சை பீட் பண்ணி கீப்பர்ட்ட போயிருச்சி..  உடனே அந்த பவுலர் ரிச்சர்ட்சை பார்த்து கேலியாய்  " அஞ்சு அவுன்சுல...உருண்டையா...சிகப்பா இருக்கும்..அதுக்கு பேரு பால்..அத பாத்தீங்களா.." னு கேட்டானாம். ரிச்சர்ட்ஸ் சிரிச்சாராம். அதற்கு அடுத்த பால் "சொத்"னு ஒரு அடி. மரண சிக்ஸ். கிரவுண்ட விட்டு வெளிய போயிருச்சாம். உடனே ரிச்சர்ட்ஸ் பவுலர பாத்து "உங்களுக்குத் தான் பந்த பத்தி நல்லா தெரியுமே போய் தேடி எடுத்திட்டு வந்திருங்க.".அப்டின்னாறாம்.." எல்லோரும் சிரித்தோம். நான் என்னை ரிச்சர்ட்ஸ்ஸாகவும் பவுலராய் அக்தரையும் நினைத்துக்கொண்டு கனவு கண்டு பார்த்து சிரித்தேன்.

கருத்துகள்

Janagar இவ்வாறு கூறியுள்ளார்…
Arumaiyana yatharthama varthaihal...kadaisila ganguly dialogue semma machan..
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான எழுத்து! ஒரே மூச்சில் உங்கள் ப்ளாக் எழுத்துக்கள் எல்லாவற்றையும் படிக்கவைத்து விட்டது! மிக சரளமாக, அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!